Monday, March 31, 2008

மணிப்புறாவும் மாடப்புறாவும்!


மணிப்புறாவும் மாடப்புறாவும் மகிழ்ந்து வந்ததே
மாலையில் மேல் மாடத்தில் அசைந்து திரிந்ததே
அணிஅணியாய் கீச்சிட்டு பறந்ததே
பூஞ்சோலையில் நல் கூட்டமாய் இருந்ததே!

வெள்ளைப்புறாவும் சாம்பல்புறாவும் கலந்து நகர்ந்ததே
வெள்ளை உள்ளமாய் சிறகடித்து பறந்ததே
கள்ளமில்லா குழந்தைகளும் கை கொட்டி சிரித்ததே
உள்ளங்களை கொள்ளை கொள்ளும் சமாதானப் புறாவாய் ஆனதே!

(அம்மா
எழுதித் தந்த கவிதை)

Sunday, March 23, 2008

மெய்யைக் கற்போம்

கசட தபற வல்லினமாகும்;
கல்வி கற்பது கடமையுமாகும்!

ஙஞண நமன மெல்லினமாகும்;
நல்லதை நாடல் நம்செயலாகும்!

யரல வழள இடையினமாகும்;
யாவரும் இணைந்தால் நலம் பெறலாகும்

வல்லினம் கற்றால் வீரம் பேசலாம்;
மெல்லினம் கற்றால் மெதுவாய்ப் பேசலாம்!

இடையினம் கற்றால் எளிதில் பேசலாம்;
இளமையில் கற்றால் இனிக்கப் பேசலாம்!